Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


திகாம்பரம் - பாலித்த திடீர் சந்திப்பு


2021-07-16 14868

 

மீண்டும் ஐ.தே.கவில் இணைவு?


ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்திற்கு மீள் பிரவேசம் செய்துள்ளதையடுத்து எதிர்கட்சியிடையே பிளவுநிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதன் பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக் கட்சிகளில் ஒன்றானிய தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவுடன் சந்திப்பொன்றை நடத்தியிருக்கின்றார்.

இந்த சந்திப்பானது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமாகிய ஸ்ரீகொத்தவில் நேற்று மாலை நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், இலங்கைக்குத் திரும்பியிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பையும் நடத்தியிருக்கின்றார்.

பழனி திகாம்பரம் மற்றும் பாலித்த ரங்கே பண்டாரவுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு பற்றி மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாலித்த ரங்கே பண்டார தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்திற்கு மீள் பிரவேசம் மேற்கொண்டிருப்பதையடுத்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள்  பிளவுநிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

எனினும் இதுவரை அப்படியான எந்த பிளவுநிலையும், கட்சித்தாவல்களும் ஏற்படவில்லை.

இருந்த போதிலும், ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் தந்திரத்தைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து விலகிச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த உறுப்பினர்களை மீளத்தன்வசம் சேர்த்துக் கொள்வதற்கான வியூகத்தை வகுத்து வருவதாக கொழும்பு அரசியல் மட்டத்தில்  பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் சேர்ந்திருந்த களுத்துறை மாவட்டம் அகலவத்தை பிரதேச சபைத் தலைவர் உட்பட உறுப்பினர்கள் 09 பேர், இன்றைய தினம் ஐக்கிய தேசியக்கட்சியுடன் மீளவும் இணைந்துக் கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

இப்படியான சூழ்நிலையிலேயே சஜித் அணியிலுள்ள முக்கியஸ்தராகிய நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிநிதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertiesment