Friday 26th of April 2024

English Tamil
Advertiesment


சஜித் உட்பட பல 115 பேரை கட்சியிலிருந்து நீக்கினார் ரணில்


2020-07-29 7825

மேலும் பலர் நாளை மறுதினம் நீக்கப்படுவதாக ரவி தெரிவிப்பு

 

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த உறுப்பினர்கள் 115 பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான கடிதங்கள் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

சஜித் பிரேமதாஸ, ரஞ்ஜித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பல பிரபலங்களும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதோடு, மேலும் பலர் நாளை மறுதினம் நீக்கப்படுவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்ட மாகாண சபை, நகர சபை மற்றும் முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர்கள் என 115 பேரின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி அதிரடியாக நீக்கியுள்ளது.

எனினும் சஜித் பிரேமதாஸ, ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோரின் பெயர்கள் அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இதுதொடர்பான இறுதி முடிவு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்றைய தினம் கூடி எடுத்திருந்ததோடு இன்றைய தினம் அவர்களுக்கான கடிதங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

‘ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் ஒழுக்கமாக செயற்பட்டுள்ளது. இதனால்தான் ஏன் பலரும் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற நிலையில் அவர்களை நீக்கவில்லை என்று கேள்விகேட்டார்கள். சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க எமக்கு முடிந்தது. இதற்காக 5, 6 குழுக்களை நாங்கள் நியமித்திருந்தோம். இந்நிலையில் குழுவின் முடிவின் பிரதிபலன் நேற்று வெளியாகியது. அதற்கமைய கொழும்பு மாநகர சபை, கோட்டை மாநகர சபை மற்றும் நாவலப்பிட்டிய, கம்பளை போன்ற உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 

இந்த செயற்பாட்டின் இரண்டாவதுகட்ட நடவடிக்கை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும். இவ்வாறு உறுப்பினர்கள் நீக்கப்பட்டமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படும் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார்கள். 

ஆனால் இறுதியில் அவர்களுக்கே தோல்வி ஏற்பட்டது. இந்நிலையில்தான் கட்சியை விட்டுச்சென்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டு கடிதமும் இன்று அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அரசாங்கத்துடன் சங்கிமக்க விரும்பவில்லை. பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம். மக்கள் கைகளிலேயே அது தங்கியுள்ளது. ஆகவே தனி அரசாங்கத்தை அமைப்பதே எமது இலக்காகும்” என்றார்.
 

Advertiesment