Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


வெளிநாட்டு நிதியில் ஒரு டொலரேனும் கிடைக்கவில்லை


2020-05-14 14881

 

பகிரங்க விமர்சனத்தை வெளியிட்டது இலங்கை அரசு
 

வெளிநாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் அறிவித்த இலங்கைக்கான கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கான நிதி உதவிகள் இதுவரை வந்துசேரவில்லை என்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


அமைச்சர்கள் மற்றும் அரச உயரதிகாரிகளுக்காக 3000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகும் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கம் இன்றைய தினம் நிராகரித்துள்ளது.


கோவிட்-19 வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஒழிப்பு பணிகளுக்காகவும் அமெரிக்கத் தூதரகம், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இலங்கைக்கு வழங்கிய நிதி உதவிகளை அரசாங்கம் மறைத்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிரணியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


மக்களுக்கான பணம் மக்களுக்குப் போய்சேராமல் அவை அரசியல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களிடம் சிக்கிவிட்டதாகவும், கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணிகள் இதனால் ஸ்தம்பிதமடைந்திருப்பதாகவும் எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் முற்பகலில் நடைபெற்றது.
இதன்போது, எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நிதிகள் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.


இதற்குப் பதிலளித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண, ஒரு டொலராகிலும் வெளிநாட்டிலிருந்து உதவியாக அரசாங்கத்திற்கு இன்றுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.


(08:52) உண்மையில் கோவிட்19 வைரஸ் குறித்து நிதியமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றுவரை எந்தவொரு நாடுகளிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் ஒரு டொலராகிலும் இலங்கைக்குக் கிடைக்கவில்லை. அதேபோல கடந்த நாட்களில் எதிரணியினரும் குற்றஞ்சாட்டியிருந்தனர். 3000 வாகனங்களை அரசாங்கம் கொள்வனவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அது பொய்யான அறிவிப்பாகும். 05 வருடங்களுக்கு எந்த வாகனமும் அரசியல்வாதிகளுக்கோ, அரச அதிகாரிகளுக்கோ வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது. மருந்துகள் வெளிநாட்டிலிருந்து கிடைத்திருக்கின்றன. அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என்று தெரிவித்தார்.


இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் முனசிங்க நியமிக்கப்பட்டிருப்பதுவும் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக பொதுத் தேர்தல் நடத்தலாம் என்கின்ற அறிவிப்பை சுகாதார அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான சூழ்ச்சியாக இராணுவ அதிகாரியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல இன்றைய தினம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.


இந்தக் குற்றச்சாட்டிற்கு இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன, ஒழுக்கம் மற்றும் நிர்வாகத்திறன் கொண்ட அதேபோல இறுதிப்போரில் படையினருக்கு முழுமூச்சாக செயற்பட்ட அதிகாரியையே தற்போது சுகாதார அமைச்சின் செயலளார் பதவிக்கு அரசாங்கம் நியமித்திருப்பதாக நியாயப்படுத்தித் தெரிவித்தார்.


‘இராணுவத்தில் மிகவும் ஒழுக்கமுடைய, நேரத்தியான வேலைகளை செய்யக்கூடிய, நிர்வாகத்திறன்மிக்க உயரதிகாரிகள் இருக்கின்றனர். ஐக்கய தேசியக் கட்சியாகட்டும், எமது அரசாங்கமாக இருந்தாலும் படையினரை அவசர தேவைகளின்போது பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. கடந்த எமது அரசாங்கத்திலும் கல்வி அமைச்சின் கீழ் இராணுவ உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். சுகாதார அமைச்சிற்கு தாங்கமுடியாத கொரோனா வைரஸினால் பொறுப்புக்கள் அதிகரித்தன. அரசியலமைப்பின் அதிகாரம் மற்றும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்பு குறித்து முடிவெடுக்க 69 இலட்ச மக்கள் வாக்குகள் அளித்தமையினால் உறவினர், பழக்கமானவர்கள், குடும்ப அங்கத்தவர்கள் எனப் பாராமல் நியமனங்களை ஜனாதிபதி வழங்குகின்றார். மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க, இராணுவத்தின் மருத்துவப் பிரிவிலிருந்த பணிப்பாளர் நாயகம் என்பதுபோல றுகுனு பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடத்தின் பட்டதாரி. அவர் விசேட வைத்திய நிபுணர் என்பதோடு தாம் அறிந்த விடயங்களை ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு பகிர்ந்தளித்தனர். 1986ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ் பட்டத்தைப் பெற்றவர். அவர் தீர்க்கமான நேரத்தில் ஆயிரக்கணக்கான படையினர் உயிர்த்தியாகம் செய்தபோத அவர்களுக்காகப் பாடுபட்ட மருத்துவர்களில் ஒருவராவார். அதனால்தான் இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கின்றோம்” என்றார்.

Advertiesment