Friday 17th of September 2021

English Tamil
Advertiesment


இது முகமூடிகளின் யுகம்


2020-04-12 5593

 மனிதர்கள் முகத்தை மூடிக் கொண்டு திரிகின்ற காலம். முகமூடிகளுக்குப் பின்னால், பாதுகாப்புத் தேடுவதில் தொடங்கிய இந்த யுகம், அதற்குப் பின்னால் அரசியல் நடத்துவது, நிழல் போரில் ஈடுபடுவது வரை சென்றிருக்கிறது.

முகமூடிகளுக்காக உலக வல்லரசுகள் இப்போது போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளவும் தயாராக இருக்கின்றன. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, கடந்த மார்ச் மாதம் வரைக்கும், மூன்றாவது உலகப் போர் ஒன்று மூண்டால் அது நீருக்கானதாகவே இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுக் கொண்டிருந்தது.

ஏனென்றால், இயற்கை பேரழிவுகளால், மழை வளம் குறைந்து கொண்டே போனது. இதனால் நீர் வளம் உலகில் குறைந்து கொண்டிருந்தது. இதனால், நீருக்கான சண்டை மனிதர்களுக்கிடையில் தொடங்கி நாடுகளுக்கு இடையிலான போராக மாறி, மூன்றாம் உலகப் போர் வெடிக்கக் கூடிய ஆபத்து இருப்பதாக, அறிஞர்கள் பலரும் கூறி வந்தனர்.

ஆனால், கடந்த சில வாரங்களில் உலகத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றங்கள், மூன்றாம் உலகப் போர், முகமூடிகளுக்காக வெடித்தாலும் ஆச்சரியம் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இன்றைய நிலையில், உலகின் மிகப் பெறுமதிவாய்ந்த உலோகங்கள், மூலப் பொருட்கள் எல்லாமே பெறுமதியை இழந்து கொண்டிருக்கின்றன.

தங்கத்தின் மீதான முதலீடு சரிந்து கொண்டிருக்கிறது. மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி கண்டு வருகிறது. இவற்றின் தேவைகள் குறைந்துஎபோனது மாத்திரமல்ல, இவற்றின் பெறுமானம் சரிந்து வருவதும் தான் அதற்குக் காரணம்.

இன்றைய நிலையில், முகமூடிகளும் (Face mask) , கையுறைகளும் (gloves) தொற்றுநீக்கிகளும் (sanitizer), செயற்கை சுவாச கருவிகளும் (ventilator), ஹைரொக்சிகுளோரோயின் மாத்திரைகளும், (hydroxychloroquine) தான் உலகில் அவசியமானவையாக மாறியிருக்கின்றன.

இவற்றுக்குத் தான் இன்று மதிப்பு அதிகம். இதனைத் தேடித் தான் உலகம் இன்று அலைந்து கொண்டிருக்கிறது. அணுகுண்டுகளை உருவாக்குவதற்காக யுரேனியத்தை தேடிக்  கொண்டிருந்த நாடுகளும், முதலீடுகளைச் செய்து சுரண்டுவதற்காக மூன்றாம் உலக நாடுகளை தேடிக் கொண்டிருந்த நாடுகளும், தமது பொருளாதார நலன்களுக்கான பிற நாடுகளை சிதைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்த நாடுகளும் இப்போ, முகமூடிகளுக்காகவும், கையுறைகளுக்காகவும், செயற்கை சுவாசக் கருவிகளுக்காகவும், தொற்றுநீக்கிகளுக்காகவும், ஹைரொக்சிகுளோரோயின் மாத்திரைகளுக்காகவும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இப்போது உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் என்ற கிருமி தான்,இதற்குக் காரணம். இந்த கொரோனா வைரஸ் உலகத்தின் ஓட்டத்தையே மாற்றி விட்டது, புதிய உலக ஒழுங்கு ஒன்றுக்கான அடிக்கல்லையும் கூட நாட்டி விட்டது. இந்த தொற்றினால், சாதாரணமாக மருந்துக் கடைகளில் நான்கு ஐந்து ரூபாவுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த முகமூடிகளுக்கு, இன்று நூற்றுக்கணக்காக ரூபாவைக் கொடுப்பதற்கு, மக்களும், நாடுகளும் தயாராக இருக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

உலகச் சந்தையில் முகமூடிகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்த சீனாவே இன்று கொரோனா வைரஸ் கிருமிகளையும் உலகத்துக்கு கொடுத்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்த சீனாவும், சீனாவை பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து விடாமல் தடுக்க முயன்று கொண்டிருந்த அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும், கொரோனாவினால், குழப்பமடைந்து போயிருக்கின்றன.

சீனாவை உலுப்பி எடுத்த கொரோனா வைரஸ், இப்போது, அமெரிக்காவுக்கும் அதன் நேசநாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெய்ன், போன்றவற்றுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் பெரிதும் திணறிக் கொண்டிருக்கின்றன. உலகின் முதல் நிலை வல்லரசாக கணிக்கப்பட்ட அமெரிக்காவின் சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் எந்தளவுக்கு பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதை இந்த கொரோனா வைரஸ் உணர்த்தியிருக்கிறது.

அமெரிக்கா இப்போது தனது நாட்டின் மக்களை காப்பாற்றுவதற்காக தனது நலன்களை மாத்திரம், உறுதிப்பத்திக் கொள்வதற்காக, தனது நேசநாடுகளுடன் மோதுவதற்கும் தயாராகியுள்ளது.

3 எம் முகமூடிகளை வெளிநாடுகளுக்கு விற்க அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த தடையினால், கனடா எரிச்சலடைந்தது. அமெரிக்காவின் செய்கையினால் எப்போதும் அதற்குத் துணையக இருந்த கனடாவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. கனடாவில் இருந்து கிளம்பிய கடுமையான எதிர்ப்புகளை அடுத்து, இந்த முகமூடிகளை கனடாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்திருக்கிறது ட்ரம்ப் நிர்வாகம்.

அதேவேளை, சீனாவில் இருந்து பிரான்சுக்கு அனுப்பப்படவிருந்த முகமூடிகளை கூடிய விலையைக் கொடுத்து, அமெரிக்கா தனது நாட்டுக்குத் திருப்பி விட்டுள்ளது. இதனால் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் பிரான்ஸ் மக்களுக்கு அவசியமான முகமூடிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

முகமூடிகளுக்காகவும், ஏனைய மருத்துவ கருவிகள், மருந்துகளுக்காகவும், அமெரிக்கா இப்போது தனது நட்பு நாடுகளைக் கூடி வெட்டி விடத் தயாராக இருக்கிறது. அவற்றுடன் போட்டி போடுகிறது. அவற்றுடன் முட்டி மோதுவதற்கும் எத்தனிக்கிறது. இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்வதற்கு வசதியாக, இந்தியாவை தனது கைக்குள் போட்டுக் கொள்ள அமெரிக்கா பெரும் பாடு பட வேண்டியிருந்தது. அவ்வாறான இந்தியாவிடம், ஹைரொக்சிகுளோரோயின் மருந்துகளை தராவிட்டால், விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

அந்தளவுக்கு அமெரிக்கா இப்போது முகமூடிகளுக்காகவும், தொற்று நீக்கிகளுக்காகவும், மருந்துப் பொருட்களுக்காகவும் நேசநாடுகளைப் பகைத்துக் கொள்ளவும், அவற்றை மிரட்டி அச்சுறுத்தவும் தயாராக இருக்கிறது.

அமெரிக்காவின் உலக வல்லரசு நிலையை இந்த முகமூடிகள் கேள்விக்குட்படுத்தியிருக்கின்றன. தனது நாட்டுக்குத் தேவையான முகமூடிகளையும், மருந்துகளையும் கூட உற்பத்தி செய்ய முடியாத நிலையில் தானா அமெரிக்கா இருந்திருக்கிறது. தனது நாட்டு மக்களை பேரிடர் ஒன்றில் இருந்து காப்பாற்றத் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் தானா, உலகப் பெரும் வல்லரசு இருந்திருக்கிறது என்ற கேள்வி இப்போது உலகமெங்கும் எழுப்பப்படுகிறது.

இந்தக் கேள்வி அமெரிக்காவுக்கு அவமானத்தை மாத்திரம் கொடுக்கவில்லை. அதன் வல்லரசுத் திறன் மீதும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. தனியே ஆயுதங்களாலும் பொருளாதார பலத்தினாலும் மாத்திரம் உலகப் பெரும் வல்லரசாக கணிக்கப்பட்ட அமெரிக்காவுக்கு, அதன் உண்மை விம்பம் எப்படிப்பட்டது என்பதை இந்த முகமூடி யுகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது.

எனவே, இந்த முகமூடி யுகம், முடிவுக்கு வரும் போது, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தமது முன்னைய கோட்பாடுகளையும், உத்திகளையும் மாற்றியமைக்கும் முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகவே இருக்கப் போகிறது.

 

Advertiesment