இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவும் என்கிற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மக்களின் கவனக்குறைவு காரணமாக பல்வேறு பிரதேசங்கள் சுகாதார அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.
வைரஸ் பரவும் அச்சம் காரணமாக அடுத்தமாதம் நடத்தப்படவிருந்த உயிர்த்த ஞாயிறு தினமும், தீவிரவாத தாக்குதலை நினைவுகூறும் விசேட ஆராதனைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 11ஆம் திகதி முதல் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது கடந்துசெல்கின்ற இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தான காலம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் வீட்டிலிருந்தே தங்களுக்கு அவசியமான மருத்துவருடன் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயலி ஒன்றும் சுகாதார அமைச்சினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, பல பிரதேசங்களிலும் தொற்றுநீக்கும் மருத்துகளும் தெளிக்கப்பட்டு வருகின்றன.
இப்படியான அவதானம் காணப்படுகின்ற போதிலும் பல்வேறு பிரதேசங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை மக்கள் உதாசீனப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவியுள்ள பிரதேசங்கள் மற்றும் உயிரிழப்பு இடம்பெற்ற பகுதிகளை சுகாதார அமைச்சு முடக்கியுள்ளது.
இதற்கமைய நீர்கொழும்பு – போருத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்ததை அடுத்து அவரது பிரதேசம் மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இலங்கையின் முதலாவது மரணம் பதிவாகிய மாறவில பிரதேசத்தைச் சேர்ந்த நபர் வசித்த பிரதேசமும் முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அத்துடன், யாழ்ப்பாணம் அரியாலை பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயமொன்றில் நடைபெற்ற ஆராதனையில் கலந்துகொண்டிருந்தனர் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் - தாவடி பிரதேசத்திலுள்ளவர்களின் பகுதியும் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் அண்மையில் கண்டி – அக்குறணையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பீடித்திருப்பதாக உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த பிரதேசமும் மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டம் பண்டாரகம – அட்டுளுகம பிரதேசத்திலிருந்தும் சில கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த பகுதியும் சுகாதார அதிகாரிகளால் முடக்கப்பட்டது.
இதேவேளை, கொழும்பு – களுபோவில மருத்துவமனையின் 05ஆம் இலக்க நோயாளர் அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அந்த வார்ட்டில் சிகிச்சைப் பெற்றுவந்த மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்றைய தினம் உறுதியாகியது.
இதனையத்து அவர் தங்கியிருந்த 05ஆம் இலக்க நோயாளர் அறை மூடப்பட்டதாக மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
தொடர்ந்து அந்த வார்ட்டில் சேவைசெய்துவந்த 20 தாதியர்கள் மற்றும் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவந்த 15 நோயாளர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Lanka Newsweek © 2026