இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கும், இறையான்மைக்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியதால்தான் அதிலிருந்து விலகும் முடிவை புதிய அரசாங்கம் எடுத்ததாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பொதுஜன முன்னணியின் தவிசாளருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விளக்கம் வழங்கியுள்ளார்.
ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்தியிருந்தால் உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்களைக்கூட முறையான விசாரணை செய்யமுடியாமற் போயிருந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு இராஜகிரியவிலுள்ள தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் தவிசாளரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கலந்துகொண்டார்.
குறிப்பாக ஜெனீவா பொறுப்பு கூறும் தீர்மானத்திலிருந்து விலகுவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன நேற்றைய தினம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் வெளியிட்டிருந்தார்.
தீர்மானத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை இன்றைய ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்திய பேராசிரியர் பீரிஸ், இலங்கை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாக இதனைக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
'ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இணை நாடுகளுடன் 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொண்டு வந்த பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தமை தேசதுரோக செயற்பாடாகவே கருத முடியும். பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இலங்கை அரசியலமைப்பிற்கும், இறையாண்மைக்கும் முற்றிலும் முரணானதாகும். பல விடயங்கள் சாதாரணமாகவே புறக்கணிக்கும் அளவிற்கு முரண்பாடான தன்மைகளை மாத்திரமே கொண்டிருந்தன. ஒரு சில பரிந்துரைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் காணப்பட்டன. இவை கடந்த காலங்களில் பலதரப்பட்ட விதத்தில் பாதிப்பினை ஏற்படுத்தின. இலங்கையின்; உள்ளக விவகாரங்களின் சுயாதீனத்தன்மைக்கு சவால் விடுக்கும் வகையிலான பரிந்துரைகளாக பொலிஸ் மற்றும் இராணுவ சேவை மீள் திருத்தம். காணி விடுவிப்பு, அதிகார பகிர்வு, பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை திருத்தம், குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கல். உள்ளிட்ட 20 பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டன. நாட்டின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான அனுமதியை நல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கியது. மனித உரிமை பேரவை நடுநிலையாக செயற்படும் அமைப்பாக காணப்பபடவில்லை. 2017ம் ஆண்டு அமெரிக்கா மனித உரிமை பேரவையினை கடுமையாக விமர்சித்து பேரவையில் இருந்து விலகியமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சுயாதீனத்தன்மை தொடர்பான தன்மையினை வெளிப்படுத்தியது” என்று கூறினார்.
இதேவேளை இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜெனீவா தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்தியிருந்தால் நாட்டிற்கு பாரிய விளைவுகளே ஏற்பட்டிருக்கும் என்று கூறியதோடு, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் சம்பந்தமான விசாரணைகளைக்கூட முறையாக நடத்த முடியாமற் போயிருந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
;'இந்த தேசத்துரோக தீர்மானத்தை நாங்கள் அமுல்படுத்தியிருந்தால் நாட்டிற்கு பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும். குறிப்பாக பய்ஙரகவாத தடைச் சட்டம் இருந்த படியினால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் அதனுடன் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து உண்மையைக் கண்டறிய முடிந்தது. இருப்பினும் அந்த விசாரணைகள் சரிவர செய்யப்படவில்லை. சிலரை பாதுகாக்கின்ற நோக்குடன் நடத்தப்பட்டது. நேரடி தொடர்புகொண்ட சிலரை கைது செய்யவில்லை, விசாரணை செய்யவும் இல்லை. சிலரை சில மணிநேரம் விசாரணை செய்தனர். விசாரணையின் பின்னர் சிலர் வெளிநாட்டிற்குச் சென்றனர். இருப்பினும் ஜெனீவா தீர்மானத்தின்படி பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கியிருந்தால் இவ்வளவு தூரமாகிலும் இந்த விசாரணைகள் நடைபெற்றிருக்காது. ஆகவே தற்போதைய அரசாங்கத்தின் வெற்றியாகவும், சிறந்த முடிவாகவும் அதனைப் பார்க்கின்றோம்” என்றார்.
Lanka Newsweek © 2026