ஐக்கிய தேசிய முன்னணி அமெரிக்க ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டை காட்டிக்கொடுக்கப் போவதாக தேர்தல் காலத்தில் கூறித்திரிந்த எதிரணியினர் ஆட்சிக்கு வந்ததும் அந்த ஒப்பந்தத்தை செய்துகொள்ள முயற்சி செய்வதானது நனைப்பிற்குரிய விடயம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் பொய்யான பிரசாரங்களை நம்பி, சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றப்பட்டுவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
வீதிப் போக்குவரத்து அபிவிருத்தி, காணி அளவீடுகள் உட்பட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் போர்வையில் அமெரிக்காவின் மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தை செய்துகொண்டு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
அதேபோல நாட்டிற்கு ஆபத்தான எந்த ஒப்பந்தங்களையும் தான் செய்துகொள்ளப்போவதில்லை என்பதை தற்போதைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, தனது ஒவ்வொரு பிரசார மேடைகளிலும் வாக்குறுதி அளித்திருந்தார்.
நாட்டிற்கு ஆபத்தான ஒப்பந்தங்களை செய்ய வேண்டாம் என்று மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியிருந்தனர்.
எனினும் எவ்வளது ஆபத்து நிறைந்ததாக அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை விமர்சித்தாலும் அதில் எந்தவொரு ஆபத்தான யோசனையும் உள்ளடக்கப்படவில்லை என்பதை அப்போதைய அரசாங்கத்திலிருந்த அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க உட்பட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில, குறித்த அமெரிக்க ஒப்பந்தத்தில் 70 வீதமான யோசனைகள் நாட்டிற்கு தற்காலத்திற்கு அவசியமானது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க, எம்.சி.சி ஒப்பந்தத்தை ஆபத்து என்று மக்களை ஏமாற்றிய பொதுஜன முன்னணியினர் இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் அந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட தீவிரமாக இறங்கியிருப்பதாகக் கூறினார்.
'சஜித் பிரேமதாஸ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பேசப்பட்ட விடயங்களில் பிரதானமான ஒன்றுதான் அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தமாகும். மில்லேனியம் சவால் ஒப்பந்தமானது சஜித்திற்கு எதிராக பொதுஜன முன்னணியினர் பாவிக்கப்பட்ட ஆயுதமாகும். அமெரிக்க அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்காவை காட்டிக்கொடுக்கப் போவதாக சொன்னார்கள். அந்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்காமல், இந்த நாட்டில் எத்தனை பேர் ஏமாற்றமடைந்தார்கள். அரசியல் பேச்சுக்களுக்கு செவிகொடுத்து சஜித் பிரேமதாஸவுக்கு எத்தனைபேர் வாக்களித்தார்கள். ஆனால் இப்போது அந்த ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்த எதிர்த்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன கூறுகிறார்கள்? விசேடமாக உதய கம்மன்பில, எம்.சி.சி ஒப்பந்தமானது 70 சதவீதம் மிகவும் நல்ல ஒப்பந்தம் என்றும், 30 சதவீதமே அதில் குறைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்ததை அவதானித்தேன்.
போக்குவரத்து மற்றும் வீதிக்கட்டமைப்பை விருத்தி செய்யும் திட்டம் சிறந்தது என்றும் காணி அளவீடுகளில்தான் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். எந்த ஒப்பந்தமானாலும் அதிலுள்ள குறைகளை பேச்சு நடத்தி தீர்த்து அமுல்படுத்துவது தானே நாட்டிற்கு சிறந்தது. இந்த அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டைக் காட்டிக்கொடுக்கப் போவதாக மக்களை நம்பவைத்து கடுமையான விமர்சனத்தினால் விளித்த எதிரணியினர் இப்போது அதனை எப்படி செய்யப்போகிறார்கள்? அவர்கள் வெளியிட்ட கருத்துக்களினால் இந்த ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பலர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக வாக்களித்தனர், சிலர் உண்ணாவிரதம் செய்தனர், தூதரகங்களுக்கும் கடிதங்களை எழுதினார்கள். அவ்வாறு செய்தவர்கள் இன்று என்ன செய்யப்போகிறார்கள்?
விசேடமாக எதிரணியினர் மேற்கொண்ட பிரசாரங்களை நம்பி சஜித்திற்கு எதிராக வாக்களித்த மக்கள் இன்று என்ன செய்யப்போகிறார்கள் என்பதை கேட்க விரும்புகின்றேன். எம்.சி.சி ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டைக் காட்டிக்கொடுக்கப் போவதாக கூறியவர்கள் அதனை இப்போது செய்யமுயற்சிப்பதை மக்கள் அடையாளங்கண்டுகொள்ள வேண்டும். மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மையான விடயங்களை தடுப்பதற்கே எதிரணியினர் போராடினார்கள். எதிர்காலத்தில் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகின்றோம். பொதுத் தேர்தலுக்கு இன்னும் 80 நாட்கள் என்ற குறுகிய காலமே இருக்கின்ற நிலையில் ஏமாற்றமடைந்தது போதும் என்று எண்ணி மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள்” என்றார்.
இதேவேளை, அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பான தீர்மானமானது இராஜதந்திர மட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்று என அந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கடந்த தேர்தல் காலத்தில் கருத்து வெளியிட்டவர்களில் ஒருவரான வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுனில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
'அது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். வெளிவிவகார அமைச்சும், அதனுடன் தொடர்புபடும் துறையினருடனும் புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் கையெழுத்திடவில்லை. கடந்த அராசங்கத்தின் அமைச்சரவை வரைபே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நகர்வுக்கு செல்ல அது போதுமானதல்ல. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கடந்த தேர்தலின்போது அதிகமாக பேசப்பட்ட விடயமாக இது கருதப்படுவதோடு இன்னும் இரண்டு ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் வரவுள்ளன. அதுகுறித்து இராஜதந்திர மட்டத்தில் நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Lanka Newsweek © 2026