Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


தேர்தல் போரில் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க..!


2019-09-30 14883

அரசியலினால் இலங்கை பாழ்படுத்தப்பட்டு விட்டது என்று கூறியிருக்கும் ஓய்வுப்பெற்ற இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு சுயாதீனமான சக்தியொன்று தேவையென வலியுறுத்தினார்.

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக அவரை அறிவிப்பதற்கான நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு தன்னிடம் புத்தி ஜீவிகளும் சிவில் சமூக அமைப்புகளும் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளராக முன்வந்திருப்பதையும் இலங்கைக்கு மாற்று சக்தியொன்று தேவை என்றும் அந்த சக்தி தானே என்றும் கூறினார்.

கடந்த ஆகஸ்ட்டில் இராணுவ தளபதி பதவியிலிருந்து ஓய்வுப் பெற்ற அவர் இராணுவத்தில் இருந்துக் கொண்டு சிறந்த சேவையை நாட்டுக்கும் மக்களுக்கும் வழங்கியதாகவும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் காமின் நந்த குணவர்தன, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் முகாமையாளர் டாக்டர் அனுரகுமார உள்ளிட்ட பேராசிரியர்கள், நிபுணர்கள், ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரிகள், கலைஞர்கள், சிவில் அமைப்பு அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 22ஆவது தளபதியாக கடமையாற்றிய ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து நாட்டில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துவதற்கு அவரால் எடுக்கப்பட்ட தொடர் முயற்சிகள் மக்கள் மத்தியில் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் கொண்டதாக அமைந்தன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 2010ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த அவர், மீண்டும் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

Advertiesment