நாட்டின் பொருளாதார நெருக்கடியும் டொலர் தட்டுப்பாடும் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாகவும், தானும் ஏனைய உலகத் தலைவர்களும் தலைவர்களும் இந்த துரதிஷ்டமான நிலைக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தான் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தின் பின்னர் கொவிட்-19 தொற்று டொலர் நெருக்கடியை வெகுவாகப் பாதித்துள்ளதாகவும், திட்டமிடப்பட்ட பலவற்றைச் செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்களுடன் திங்கட்கிழமை (27) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் இறக்குமதிக்கு மாதாந்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும், நிலக்கரி இறக்குமதிக்கு வருடாந்தம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும், அந்த செலவை நாட்டின் பொருளாதாரம் தாங்கிக்கொள்ளவே முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் இருந்து மீளுவதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் நாடு கவனம் செலுத்த வேண்டுமெனவும், இதற்கு தான் தொடர்ந்தும் முன்னுரிமை அளிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Lanka Newsweek © 2024