சேர் டேவிட் அமேஸ் படுகொலை செய்யப்பட்ட நகர்வு ஒரு பயங்கரவாத செயல் என பிரித்தானிய காவற்துறையினர் அறிவித்தபின்னர் இந்த நகர்வு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லண்டனில் குறித்த சந்தேக நபருடன் தொடர்புடைய இரண்டு இடங்களில் அதிரடியான தேடுதல்கள் நடத்தப்பட்டதாக லண்டன் பெருநகர காவற்துறை தெரிவித்துள்ளது
எசெக்ஸ் தென்மேற்குப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான 69 வயதான சேர் டேவிட் அமேஸ் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் தொகுதிமக்களை சந்திக்கும் நிகழ்வில் நேற்று பங்கெடுத்தபோது அவரை சந்திக்க வந்த போர்வையில் இருந்த 25 வயதான இளைஞர் ஒருவரால் 17 தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சோமாலிய பூர்வீகத்தைக்கொண்ட குறித்த இளைஞர் பிரித்தானிய குடியுரிமையை கொண்டிந்த போதிலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் ஈர்க்கபட்ட ஒருவர் என குறிப்பிட்டுள்ள காவற்துறை இவரது பெயரை இதுவரை வெளியிடவில்லை.
இவர் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு காவற்துறை பிரிவில் தடுத்துவைக்கபட்டு விசாரணைசெய்யப்பட்டு வருகிறார்.
இந்த விசாரணைகளில் பிரித்தானிய உள்ளக புலனாய்வுத்துறையான எம்.ஐ 5 பிரிவும் ஈடுபட்டுவருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ கொக்ஸ் அதிதீவிர வலது சாரி தன்மை கொண்ட ஒருவரால் குத்திகொல்லப்பட்டபின்னர் இடம்பெற்ற இந்த சம்பவம் பிரித்தானிய அரசியலில் அதிர்வலைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய பாதுகாப்பு தொடர்பான மேலதிக வினாக்களையும் எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய பாதுகாப்பு தொடர்பான மேலதிக நகர்வுகள் உடனடியாக எடுக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் எதிர்கட்சித்தலைவர் சேர் கெயர் ஸ்ராமரும் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் சகிதம் இன்று காலை படுகொலை இடம்பெற்ற தேவாயத்துக்கு ஒன்றாக சென்று பூங்கொத்துக்களை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Lanka Newsweek © 2024