Tuesday 26th of October 2021

English Tamil
Advertiesment


சீனாவுக்கு செக் -இலங்கையை உளவுபார்க்க வரும் இந்திய அதிதி


2021-10-01 5684

 

மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பயணத்தின் போது சீனாவின் ஆதிக்கம் குறித்த இந்தியாவின் கவலையை இலங்கையிடம் அவர் தெரிவிப்பார் என்கின்றன வெளியுறவுத் துறை வட்டாரங்கள்.

சர்வதேச அரசியலில் நாடுகளின் அணி சேர்க்கைகள், புதிய புதிய கூட்டமைப்புகள், ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து வேகமாக நிகழ்ந்து வருகின்றன. அண்மையில் இந்தியா தலைமையிலான குவாட் (QUAD) அமைப்பின் உச்சிமாநாடு நியூயார்க் நகரில் நடைபெற்றது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இணைந்து குவாட் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். அதாவது தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பான சார்க் போல இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான ஒரு கூட்டமைப்பு குவாட்
அமெரிக்கா, ஆஸி, பிரிட்டன் ஒப்பந்தம்
இந்தியாவுடன் குவாட் அமைப்பில் அங்கம் வகித்த போதும் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பிரிட்டனுடன் அண்மையில் Aukus என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில் நுட்பத்தை ஆஸ்திரேலியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் இது. இருந்தபோதும் இந்தியாவை தவிர்த்துவிட்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது பெரும் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியது.

 

இந்தியா-அமெரிக்கா உறவுகள்

 

 

ஏனெனில் இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியம், தென்சீனா கடல் விவகாரங்களில் இந்தியாவும் ஒரு முக்கியமான நாடு. அதனால்தான் 2016-ல் லெமோ என்ற ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் கையெழுத்திட்டன. அதாவது இந்தியாவை அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வகை செய்யக் கூடிய ஒப்பந்தம் இது என விமர்சிக்கப்படுகிறது. அப்படியான ஒரு விமர்சனத்தை மத்திய அரசும் நிராகரித்தது. 2018-ல் காம்காசா எனப்படும் இன்னொரு ஒப்பந்தத்தையும் இந்தியாவும் அமெரிக்காவும் உருவாக்கின. இதுவும் பாதுகாப்பு துறை தொடர்பானதுதான். 

2020-ல் பெகா எனப்படுகிற இன்னொரு பாதுகாப்பு துறை சார்ந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டன. இந்தியாவை தமது அணியில் தக்க வைத்துக் கொள்வதில் தீவிரமாக இருந்து வந்த அமெரிக்கதான் திடீரென இந்தியாவை தவிர்த்துவிட்டு Aukus ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
 அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் இந்த போக்கால் இந்தியா பெருமிதத்துடன் பேசி வரும் குவாட் அமைப்பின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வியையும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர். குறிப்பாக பிரதமர் மோடியின் அமெரிக்கா பயணத்தில் அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளிப்படுத்திய அலட்சியமான போக்குகள் அமெரிக்கா- இந்தியா உறவின் எதிர்காலத்தையும் ரொம்பவே கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

தெற்காசிய நெருக்கடி

 

இப்படியான ஒரு சர்வதேச நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டிருக்கும் நிலையில் தெற்காசியாவிலும் ஆகப் பெரும் சவால்கள் உருவெடுத்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால் அந்த நாடு மீது 20 ஆண்டுகளாக இருந்த இந்தியாவின் பிடி தளர்ந்து போய்விட்டது. ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் தமது பி டீமாக பயன்படுத்துகிறது. இதற்கான போட்டியில் பாகிஸ்தான் ராணுவமும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-ம் போட்டிப் போட்டுக் கொண்டு களமிறங்கிவிட்டன. ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுக்கு சீனா நேசக்கரம் நீட்டிக் கொண்டே இருக்கிறது. இலங்கைக்கும் தாலிபான்கள் க்ரீன் சிக்னல் கொடுத்து தங்களை ஆதரிக்க வைக்கும் அத்தனை ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். எல்லையில் சீனா மீண்டும் வாலாட்ட தொடங்கிவிட்டது. அண்டை நாடான இலங்கையில் சீனாவின் கை ஓங்கி இருக்கிறது. மன்னார் வளைகுடாவில் அதாவது இந்தியாவின் தெற்கு வாசலில் சீனா நின்று கொண்டிருக்கிறது. இலங்கையை அனேகமாக முழுமையான ஒரு காலனி நாடாக சீனா மாற்றிவிடும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. அந்த அளவுக்கு இலங்கைக்கு குறுகிய கால கடன்கள் கொடுத்திருக்கிறது சீனா. இந்த கடன்கள் திரும்ப தர முடியாத பட்சத்தில் இலங்கையின் நிலப்பரப்பை நீண்டகால குத்தகைக்கு சீனாவுக்கு கொடுக்க வேண்டியதும் வரும். அந்த நிலப்பரப்பு சீனாவின் சுயாட்சிப் பிரதேசமாக உருவெடுக்கும். கொழும்பு துறைமுநகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் போல இலங்கையின் பெருநிலப்பரப்பும் சீனா வசமாகும்.

 

இலங்கைக்கு பயணம்

 

இப்படி இந்தியாவை சுற்றிய அத்தனை நாடுகளும் ஒருவிதமான நெருக்கடியை தந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ஆகக் குறைந்தபட்சம் இலங்கையையாவது தமது கட்டுப்பாட்டில் வைத்தாக வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில்தான் அண்மையில் நியூயார்க்கில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அடுத்த மாதம் தொடக்கத்தில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பயணத்தின் போது ஈழத் தமிழரின் அரசியல் உரிமைகள் பற்றி பேசுகிறார்களோ இல்லையோ நிச்சயம் இலங்கையில் அதிகரித்துள்ள சீனாவின் ஆதிக்கம் குறித்த கவலையை இந்தியா தெரிவிக்கும் என்கின்றனர் வெளியுறவுத்துறை வட்டாரங்கள்.


 

Advertiesment