இரசாயன உரங்களுக்கு அரசு தடை விதிக்காமல் இருந்திருந்தால், நாடு முகம் கொடுத்துள்ள மோசமான நெருக்கடியை வெற்றி கொள்வதற்கான முயற்சிகளை தொடர்வதற்கும் பாதுகாப்பதற்கும் விவசாயத் துறை கைகொடுத்திருக்கும். நாட்டை பாரிய நெருக்கடியில் தள்ளியிருக்கும் கொரோனா தொற்றுக்கு முன்னால் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஏனைய துறைகளில் வேலை இழந்தவர்களுக்கான காப்புறுதியை வழங்குவதற்கான நல்லதொரு வழியாகவும் விவசாயத் துறையே காணப்பட்டது. ஆனால் ஏனைய துறைகளைப் போலவே நாட்டின் விவசாயத் துறையும் சீர்குலைந்து போயுள்ளது. உண்மையில் இத்தகைய நெருக்கடியான நேரங்களில் நிலைமையை சுதாகரித்துக் கொண்டு விவசாயத் துறையை அழகான வாய்ப்பாக கருதி ஒழுங்காக பயன்படுத்தியிருக்க வேண்டும்.
நான் இங்கு விவசாயம் என்பதனால் நாடுவது நெற் செய்கை, களப்பயிச் செய்கை, வணிக வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் காட்டு வளங்கள் உட்பட ஒரு முழுமையான விவசாயத் துறையையாகும். இலங்கையின் விவசாயத் துறையில் உழைக்கும் தொழிலாளர் சக்தி 25 சதவீதமாக காணப்பட்டாலும் தேசிய உற்பத்தியில் அதன் பங்களிப்பு ஏழு சதவீதம் மட்டுமே. இங்கு நெல் உள்ளிட்ட உணவுப் பயிர்களை அடிப்படையாகக் கொண்ட பராம்பரிய விவசாயமும் வணிக தோட்ட விவசாயமும் தேக்க நிலையில் தான் உள்ளது. கமத்தொழில் செய்யும் ஒரு விவசாயி ஒரு போகத்தில் ஏக்கருக்கு 40,000 ரூபா மாத்திரமே வருமானமாக பெற முடிகிறது. அது ஒரு அற்பத் தொகை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் சுமார் 1,000 ரூபாவாக உயர்ந்துள்ளது. நிலைமை இவ்வாறுள்ள போதும் இலங்கை ஆட்சியாளர்கள் இன்னும் நெற் செய்கை மற்றும் ஏனைய விவசாயங்களில் மன்னர் பாரக்கிரமபாஹுவை முன்மாதிரியாக வைத்திருப்பது தான் ஆச்சரியமாக உள்ளது.
நாட்டில் தற்போது பரவியுள்ள தொற்று நோய் சூழ்நிலையை சந்தர்ப்பமாக பயன்படுத்தி, விவசாயம் செய்ய பொருத்தமான பிராந்தியங்களில் உள்ள கிராம நிலதாரி பிரிவுகளின் கீழ் உழவர் சங்கங்களை உருவாக்குவதன் மூலம் ஒரு வலுவான விவசாய கூட்டுறவு சங்க இயக்கத்தை நிறுவ முடியும்.
மேற்படி சங்கத்தின் ஊடாக விவசாயிகளின் உற்பத்திகளை வாங்கி விற்கும் விநியோக மையமாக அதனை மாற்றுவதன் மூலம் சுபீட்சமான நாளையை எதிர்பாக்கலாம். உற்பத்திப் பொருட்களை உரிய நேரத்தில் விற்க முடியாமல் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு இத்தகைய விநியோக முறை பெரும் ஆறுதலைத் தரும். மேலும் கோவிட் தொற்று காராணமாக துயரங்களை சுமந்து வாழும் மக்களுக்கு பொருட்களை நியாயமான விலையில் சந்தைப்படுத்தும் போது அவர்களின் மனங்களை வெல்லவும் வழிவகுக்கும். இதன் மூலம் நிச்சயமாக மக்கள் நலன் பேணும் சிறந்த விவசாய கூட்டுறவு சங்கத்தை உருவாக்க முடியும்;.
காட்டு விலங்குகளால் விவசாயிகளுக்கு பெருந் தொல்லை அதிகரித்துள்ளது. விவசாயம் அழிந்து நாசமடைகின்றது. பாரிய சேதங்களையும் அழிவுகளையும் தரும் வனவிலங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் சந்தேகமின்றி இலங்கையின் விவசாயத் துறை மேம்பாட்டிற்கு இன்றியமையாத முதன்மையான நிபந்தனையாக கருத முடியும். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின்படி வனவிலங்குகளால் விவசாயத்திற்கு ஏற்பட்டுள்ள சேதம் கிட்டத்தட்ட 40 சதவீதமாகும். நாட்டின் விளை நிலங்களுக்கு சொல்ல முடியாத பேரழிவு ஏற்பட்டுள்ள இந்த வேளையில் இரசாயன உரங்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் காட்டு விலங்குகளால் விவசாயத்திற்கு ஏற்படும் பாரிய சேதத்தை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் கொடுக்கும் முடிவு நியாயமானதே. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத் துறைக்கு பெருந்தீங்கு விளைவிக்கும் வனவிலங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசுக்கு ஒரு உறுதியான கொள்கை இருக்க வேண்டும். உலகலவில் விவசாயத்திற்கு பாரிய அழிவுகளை தரும் வனவிலங்குளின் கட்டுக்கடங்காத பெருக்கத்திற்கு எந்தவொரு நாடும் அனுமதிப்பதில்லை.
71 ஆம் ஆண்டு நிகழ்ந்த கிளர்ச்சியின் போது விவசாயிகள் வசம் இருந்த துப்பாக்கிகள் திருப்பி எடுக்கப்பட்டன. அதன் பின்னர் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கங்கள் அனைத்துமே இன்றுவரை விவசாயிகளின் பாதுகாப்பிற்கு பதிலாக வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை வழங்கி வந்துள்ளன. இதன் விளைவாக வனவிலங்குகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. குரங்குகள் உட்பட ஏனைய வனவிலங்குகளின் இனப்பெருக்க அதிகரிப்புக்கு ஏற்ப அழிவுகளும் சேதங்களும் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது. அந்த சேதங்களை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வருவதாக இருந்தால் ஏராளமான குரங்குகளும் வனவிலங்குகளும் அழிக்கப்படுவதும் தவிர்க்க முடியாத இயல்பாகும்.
ஒருவேளை குரங்கு இறைச்சியை உண்ணும் நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்வதற்கும் வாய்ப்புள்ளது. குரங்குகளின் இனவிருத்திக் கட்டுப்பாட்டை திட்டமிட்டு செய்தால் தேங்காயிலிருந்து மட்டுமே பாரிய வளர்ச்சியைக் காண முடியும். இங்கு விவசாயிகள் தமக்குத் தேவையான துப்பாக்கிகளை சந்தை விலையில் வாங்குவது சாத்தியமானது அல்ல. ஆனால் விவசாய நிலப் பகுதிகளில் உள்ள கிராம சேவகர்களை மையமாக வைத்து வெடிமருந்துகளை விநியோகிப்பது சாத்தியமானதே. மேலும் கிராம நிலதாரிகளை வைத்து துப்பாக்கிகளை தேவையான நேரத்தில் குறிப்பிட்ட சில தினங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு ஒரு ஒழுங்கு முறையையும் ஏற்படுத்தலாம். அத்தகைய பொறுப்புள்ள கிராம சேவகர்களுக்கு இந்நடவடிக்கையால் கிடைக்கக் கூடிய வருமானத்திலிருந்து ஒரு பகுதியை மேலதிக கொடுப்பணவாக வழங்குவதற்கும் உத்தேசிக்கலாம்.
இலங்கையின் உணவு இறக்குமதிக்காக 1.6 பில்லியன் டொலர் செலவாகிறது. சிறந்த திட்டமொன்றை வகுத்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டிலேயே அதனை உற்பத்தி செய்யும் நிலைக்கு மாறும் போது இலங்கையின் விவசாயத் துறை பாரிய லாபம் தரும் துறையாக மாறலாம். மேலும் தொழிலாளர்கள் வசதி வாய்ப்புடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் இத்துறை கணிசமான பங்களிப்பு செய்யலாம். அவ்வாறே தேசிய வருமானத்திற்கு பெரிதும் பங்களிக்கும் துறையாக விவசாயத் துறையை மாற்ற முடியும். இத்தகைய பாரிய மாற்றத்தை கொண்டு வருவதற்கு மதம் அல்லது கலாச்சாரம் என்ற பெயரில் முட்டாள்தனமான, பகுத்தறிவுக்கு பொருந்தாத சிந்தனைகளை கட்டிக்காக்கும் மௌடீகங்களை கைவிடும் துணிவும் தைரியமும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும். மாட்டிறைச்சி பற்றிய முட்டாள்தனமான கருத்துக்களிலிருந்து விடுபட முடியுமாக இருந்தால் இலங்கை தேசம் மிக விரைவில் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும். இறைச்சி இல்லாமல் பாலுக்காக மட்டுமே பண்ணை வேளாண்மை செய்யும் முயற்சிகள் பொருளாதார ரீதியாக ஒருபோதும் வெற்றியளிப்பதில்லை. இந்த எளிய உண்மையை இலங்கை புரிந்து கொள்ளத் தவறியிருந்தாலும் அதைப் புரிந்துகொள்வது கடினமானது அல்ல.
அநகாரிக தர்மபால மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை 'ஊன் உண்ணும் கீழ்சாதி' என சாடியுள்ளார். இந்தியாவில் மாடு கடவுளாகவே பார்க்கப்படுகிறது. எனவே இறைச்சிக்கு இல்லாத மாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் நாடாக இந்தியா கருதப்படுகிறது. ஆனால் உலகின் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருப்பது தான் விந்தையானது. மாட்டிறைச்சி பற்றிய முட்டாள்தனமான கருத்துக்களை தூக்கி எறிந்து விட்டு கோழிப்பண்ணைக்கு கொடுக்கும் வரவேற்பை மாட்டிறைச்சிக்கும் அதே சமதரத்தில் கொடுத்தால் இலங்கை மிகவிரைவில் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடாக மாறும்;. இலங்கை இத்தகைய கொள்கை மாற்றத்தை அங்கீகரித்தால் கால்நடை வளர்ப்பு இலாபகரமான தொழிலாக மாறும். மேலும் அது பால் பண்ணை விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை தரும் துறையாகவும் அமையும்.
பருப்பு முக்கிய உணவு வகைகளில் ஒன்றாகும். இலங்கையர்கள் பருப்பு மீது வைத்துள்ள அளவுக்கதிகமான அன்பும் ஆசையும் ஆச்சரியம் தரக்கூடியது. கிராமங்களில் பருப்புக்கு நிகராக காதலை வைத்து நோக்குகிறாகள். காதல் இல்லாத வாழ்க்கை பருப்பு இல்லாத ஹோட்டலுக்கு சமன் என்று குறிப்பிடுவார்கள். இலங்கையின் பருப்பு இறக்குமதிக்காக வருடாந்த செலவு 79 மில்லியன் டொலர் ஆகும். இலங்கையில் பருப்பு பயிரிடுவதற்கு முடியாத ஒரு பயிர் என்று கருதப்பட்டாலும், யாழ்ப்பாணத்தின் வகாரை என்ற இடத்தில் பருப்பு பயிரிடப்படுவதுடன் வெற்றிகரமாக அறுவடையும் செய்யப்படுகிறது என குசல் பெரேரா எழுதிய ஒரு ஆக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கான இலங்கையின் இயலுமை எப்படி இருந்தாலும், பாதியாக உடைக்கப்பட்ட பாசிப்பருப்புக்கு மாற்றீடாக பருப்பு அமையலாம் என சிறது காலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உடைக்கப்பட்ட பாசிப்பயறு இப்போது சந்தையில் இல்லை. மக்கள் பருப்பிற்கு பதிலாக நறுக்கிய பாசிப்பயறை நுகரக்கூடிய நிலைக்கு மாறினால் அது இலங்கையில் பாசிப்பயறு விவசாயத்திலும் பெரியதொரு முன்னேற்றத்தை காணலாம்.
இலங்கைக்கு தேவையான மிளகாய் உற்பத்தியில் 15 சதவீதத்தையே நாடு உற்பத்தி செய்கிறது. மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான வருடாந்த இறக்குமதி செலவு ரூபா 51042 மில்லியன் ஆகும். ஒரு ஏக்கர் மிளகாயிலிருந்து பெற முடியுமான வருமானம் ஒரு ஏக்கர் நெல்லில் இருந்து பெறக்கூடிய வருமானத்தை விட 10 மடங்கு அதிகமாகும். இலங்கை அரசாங்கம் செத்தல் மிளகாய் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக மேற்கொள்ளும் தேசிய நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. அது பாரிய அளவிலான அந்நிய செலாவணியை சேமிப்பதற்கான முயற்சியாகவும் விவசாயிகளை வசதியாக வாழ வைப்பதற்கும் வழிவகுக்கும்.
இலங்கையின் நுகர்வுக்குத் தேவையான உருளைக்கிழங்கில் சுமார் 35 சதவீதம் மாத்திரமே இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்வதன் மூலம் அதற்கான பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுகிறது. கிழங்கு இறக்குமதிச் செலவு 11,619 மில்லியன் ரூபாய் ஆகும். இலங்கை இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்கள் சம்பந்தமாக ஒரு மாற்றுத் திட்டம் தேவைப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவுப் பொருட்களை இங்கேயே உற்பத்தி செய்வதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய மாற்றமானது இலங்கையின் பாரம்பரிய விவசாயத்தில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கொரோனா பேரிடர் காரணமாக தொழில்களை இழந்து நிற்பவர்களுக்கும் காப்புறுதிகளை வழங்கும் ஒரு துறையாக விவசாயத் துறை அபிவிருத்தியடையும்.
பாரம்பரிய விவசாயத்தில் துரித அபிவிருத்தி காணும் நோக்கில் நம்பிக்கை தரும் எதிர்காலத் திட்டங்களை வகுக்கும் போது, நெற் பயிர்ச்செய்கைக்காக இலங்கை அரசு ஏற்கனவே வழங்கியுள்ள விசேட முன்னுரிமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். காரணம் நெற் பயிர்ச்செய்கை என்பது அறுவடை என்ற அடிப்படையில் பாரிய முன்னேற்றத்தைக் காட்டும் ஒரு விவசாயமாகும். 1952 முதல் 2018 வரை அதன் அறுவடை வளர்ச்சி 700 சதவீதமாக இருந்துள்ளது. இந்த வளர்ச்சியை நோக்கும் போது இலங்கை அரசாங்கம் அரிசியில் தன்னிறைவு அடைந்ததாக காட்டினாலும் அது உழவர்களின் வசதிகளை நிறைவு செய்யவில்லை.
நெற் பயிர்ச்செய்கை என்பது வறுமை விளையும் இடம் என்பதே எனது அபிப்பிராயமாகும். உழவனுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தால் நெற் பயிர்ச்செய்கை மூலம் ஒரு போகத்தில் ஏக்கருக்கு ரூபா 40,000 மட்டுமே சம்பாதிக்க முடியும். மிளகாய் பயிர் செய்கை மூலம் நெல்லைவிட பத்து மடங்கு அதிகமாகவும் (ரூபா 417,000), உருளைக்கிழங்கு விளைச்சல் மூலமாக ஆறு மடங்கு அதிகமாகவும் (ரூபா 264,578) தக்காளி செய்கையால் அதனைவிட எட்டு மடங்கும் (ரூபா 319,696), கரட் பயிர்ச்செய்கையின் மூலம் ஒன்பது மடங்கும் (ரூபா 384,099) கத்தரிக்காய் மூலம் ஆறு மடங்கு அதிகமாகவும் (ரூபா 264,578) வருமானம் ஈட்ட முடியும் என புள்ளிவபரங்கள் காட்டுகின்றன.
நாட்டு மக்களின் பிராதான உணவு சோறு என்பதாலோ என்னவோ நெற் பயிர்ச் செய்கைக்கு இலங்கை அரசாங்கம் பரந்து விரிந்த மிக விசாலமான நிலப் பரப்பை ஒதுக்கியுள்ளது. அதாவது 922,151 ஹெக்டெயார் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 14.06 சதவீதமாகும். அவ்வாறே வணிக தோட்ட வேளாண்மை (208,499 ஹெக்டெயார்) உட்பட அனைத்து களப்பயிர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிலத்தின் 44.23 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது. ஈரவலயங்களில் நெற் பயிர்ச் செய்கை செய்வது பொருளாதார ரீதியாக வெற்றியளிக்காது என்றும் நாட்டுக்குத் தேவையான போதுமான அரிசியை உலர் வலயத்திலிருந்தே உற்பத்தி செய்ய முடியும் என்றும் நான் நீண்டகாலமாக கூறிவருகின்றேன். இந்த உண்மையை தற்போது விவசாய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எனவே ஈரவலயத்தில் நெற் பயிர்ச் செய்கை செய்வதை ஊக்கப்படுத்தாமல் உலர் வலயங்களில் மாத்திரம் நெல் விவசாயத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அமுலுக்கு கொண்டு வர வேண்டும். உலர் வலயத்திலிருந்து போதுமான அரிசியை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான வளங்களும் திறனும் இயலுமையும் இலங்கைக்கு உள்ளது. நெல்லிலிருந்து பெறக்கூடிய வருமானம் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், உலர் வலயங்களில் உள்ள நெல் விவசாயிகளுக்கு சிறப்பு மானியங்களை வழங்க ஒரு திட்டத்தை உருவாக்குவது பயனுடையதாக அமையும். இத்திட்டம் அமுலுக்கு வரும் போது ஈரமான வலயத்தில் பயன்படுத்தப்படும் சுமார் 400,000 ஏக்கர் நெல் நிலத்தை பொருளாதார ரீதியாக சாத்தியமான ஏனைய பயிர்செய்கைகளுக்காக பயன்படுத்த முடியும்.
இலங்கை அரசு பல்வேறு விவகாரங்களைப் பற்றி சிந்திப்பது போலவே விவசாயம் சம்பந்தமாக சிந்திப்பதும் மிகவும் மந்தமாகவே உள்ளது. விவசாயம் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களின் முன்மாதிரியாக மன்னன் பராக்கிரமபாகுவையே இன்னும் நாம் பின்பற்றுகிறோம். மன்னரை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்ட பெறுமதிமிக்க வளங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் வசதியும் வளமும் கொண்ட நவீன விவசாய பரம்பரையொன்று உருவாகும் என்றே நாம் எதிர்பார்த்தோம். மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து மேலதிக மின்வலுவை இந்தியாவுக்கும் கொடுத்து பாரிய வருமானத்தை ஈட்டித்தரும் திட்டமாகவே அதனை நம்பினோம். இதற்காக வாரியிறைக்கப்பட்ட நிதித் தொகை யாவும் நவீன விவசாய அபிவிருத்திக்காக முதலீடு செய்யப்பட்டிருந்தால் நிச்சியமாக அதன் விளைவுகள் இதனைவிட அதிகமான பயனை தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வழமையாக செய்யும் பாரம்பரிய விடயங்களை விட வேறு புதிய விடயங்களைச் செய்ய வேண்டும் என்ற வேட்கை இல்லாமை நமது தோல்விக்கான முக்கிய காரணமாகும். இங்கு நாம் நமக்குத் தேவையான சாப்பிட முடியுமான உணவுப் பொருட்களைத் மாத்திரம் உற்பத்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம். மற்றவர்கள் நுகரக் கூடிய அவர்களுக்கு விருப்பமான உணவுப் பொருட்களை வணிக நோக்கம் கொண்டு நாம் உற்பத்தி செய்வதில்லை.
களுத்துறை மாவட்டம் 1948 முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக நெற் செய்கையில் நஷ்டத்தை காட்டிய மாவட்டமாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய போக்கை கண்டுவந்தும் கூட அதனால் படிக்க வேண்டிய பாடத்தை இன்னும் கற்றுக் கொண்டதாக தென்படவில்லை. இலங்கையில் விவசாயத் துறை சம்பந்தமாக கூர்மையாகவும் தர்க்க ரீதியாகவும் சிந்திக்கும் பாங்கில் குறைபாடு நிலவுகிறது. அவ்வாறே விவசாய நிலங்களின் பயன்பாட்டை பொருத்தளவிலும் மிகவும் பலவீன போக்கே காணப்படுகிறது.
இலங்கை சமூகத்தில் காணப்படும் சமயலறை கூட புதுபிக்கப்படாத பின்தங்கிய ஒரு சமையல் அறையாகவே காட்சி தருகிறது. உணவுப் பழக்க வழக்கங்களும் ஒரே வகையான புளிச்சுப்போன ஒன்றாகவே உள்ளது. உண்ணும் உணவு வகைகளும் மிகவுமே மட்டுப்படுத்தப்பட்ட அமைப்பிலேயே காணப்படுகிறது. அதைக்கூட சிலருக்குத் தான் முறையாக ருசியாக சமைக்கவும் தெரியும். இங்குள்ள குடும்பங்களில் எந்த நாளும் சாப்பாடு ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. எப்ப பார்த்தாலும் ஒன்றோ கொச்சிக்கத் துள் உறைப்பு அல்லது பால்கறி அல்லது எண்ணெயில் வறுத்த சமையல் தான் இருக்கும். பெரும்பாலும் ஒரே வகையான உணவை ஒவ்வொரு நாளும் கொஞ்சம் மாத்தி மாத்தி சமைத்து சாப்பிடும் வழமைதான் பரவலாக காணப்படுகிறது. எனவே சமைப்பவர்கள் உணவை சமைப்பதும் சாப்பிடுபவர்கள் அவற்றை உண்பதும் இயந்திரமயமாகவே பழகிப்போயுள்ளது. சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டு திருப்தியடையும் போக்கு கிடையவே கிடையாது. அண்டா போல ஒரு தட்டெடுத்து பானையில் இருந்து சோற்றை அள்ளிப் போட்டுக் கொண்டு கொஞ்சம் குழம்பும் சேர்த்து வழமையான மரக்கறிகளுடன் சாப்பிடும் போக்கே தினமும் இங்கு நாம் காணும் காட்சியாகும்.
இறைச்சி மிகவும் அரிதாகவே நுகரப்படுகிறது. கோவாக் கறி சமையல் ஓரிரு முறைகளில் மாத்திரமே சமைக்க தெரிந்துள்ளது. தக்காளியை எப்படி சாப்பிட வேண்டும் என்றே தெரியாது. சமையலில் புதிய வழிமுறைகளைக் கண்டு விதவிதமான சமையல் கொண்டு சாப்பிடும் வழமை இல்லையென்றே சொல்லலாம். இலங்கையில் தனிநபர் உட்கொள்ளும் இறைச்சிக்கான நுகர்வு 6.3 கிலோவாக உள்ளது. மியான்மரில் இறைச்சியின் நுகர்வு 32.8 கிலோவாகவும், வியட்நாமில் 48.9 கிலோவாகவும் ஆஸ்திரேலியாவில் 111.5 கிலோவாகவும் காணப்படுகிறது. ஜப்பானியர்கள் சோறு சாப்பிடும் அளவைக் குறைத்து இறைச்சி, மீன், காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சாப்பிடுவது போல இலங்கையர்களும் மாற வேண்டும். நுகர்வு முறைகளில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் நாட்டின் ஏனைய துறைகளிலும் நல்ல பாதிப்பை ஏற்படுத்தும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரசாயன உரங்களுக்கான தடை நீக்கப்படாவிட்டால் அது தவிர்க்க முடியாமல் இலங்கையின் விவசாயத்திற்கு சாவு மணியாகவே அமையும். இரசாயன உரங்கள் அற்ற சேதன பசளைகளை மாத்திரம் பாவிக்கும் விவசாயத்தை ஒரு அழகான கனவாகக் கருதலாம் என்றாலும் அது ஒரு போதும் நனவாகும் கனவாக இருக்க முடியாது. இத்தகைய நடைமுறைக்கு பொருந்தாத இலட்சியவாதங்களுக்கு பூட்டான் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
Lanka Newsweek © 2024