Friday 14th of May 2021

English Tamil
Advertiesment


யார் இந்த கோப் குழுவின் புதிய தலைவர்?


2020-09-27 1212

சிரேஷ்ட அரச அதிகாரி, கல்வியலாளர் மற்றும் பல்வேறு துறைகளில் செயற்பாட்டாளராக இருந்து ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட பேராசிரியர் சரித்த ஹேரத் அவர்கள் கோப் குழு என அழைக்கப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சரித்த ஹேரத் 1995 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை பேராதனை பல்கலைக்கழக தத்துவவியல் மற்றும் உளவியல் கல்விப் பிரிவின் விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றிய அனுவபவம் வாய்ந்த ஒரு கல்வியலாளராவார். அவர் சுற்றுச்சூழல் நெறிமுறை பாதுகாப்பு (Conservation in Environmental Ethics) தொடர்பில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

அடிப்படையில், அவரது அறிவார்ந்த ஈடுபாடு நவீன பகுப்பாய்வு தத்துவவியல் (Contemporary Analytical Philosophy) துறையில் உள்ளதோடு அவரது ஆய்வு பிற்கால விட்கன்ஸ்டைன் தத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் நெறிமுறை (Later Wittgenstein’s Philosophy and the Environmental Ethics) தொடர்பில் இடம்பெற்றுள்ளது.

அவர் தனது கலாநிதிப் பட்டத்தை பெறுவதற்கு முன்னர் அமெரிக்க புல்பிரைட் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவின் ஒஹியோ (Ohio) பல்கலைக்கழகத்தில் சமூக மற்றும் அரசியல் தத்துவம் தொடர்பில் பட்டப்பின் பட்டத்தை பெற்றுள்ளதோடு, சீன சிச்சுவான் பல்கலைக்கழகத்தில் சீன - இலங்கை நட்புறவு தொடர்பில் பட்டப்பின் பட்டத்தையும் பெற்றுள்ளார். சரித்த ஹேரத் பேராதனை பல்கலைக்கழக தத்துவவியல் மற்றும் உளவியல் கல்விப் பிரிவின் தலைவராக 2016 முதல் 2018 வரை பணியாற்றியுள்ளார்.

அதற்கு முன்னர் அவர் 2012 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் 2015 வரை வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சின் நிரந்தர செயலாளராக சேவையாற்றியுள்ளதோடு, 2010 மே மாதம் முதல் 2013 வரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

அவர், 2005 ஆம் ஆண்டு முதல் 2010 வரை வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சின் ஆலோசகர் ஒருவராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

Advertiesment