Thursday 24th of June 2021

English Tamil
Advertiesment


கொரோனா நிலைமை: இலங்கை மோசமடைவதாக ரணில் குழு தெரிவிப்பு


2020-07-21 5441

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிடையே இலங்கையின் நிலைமை தொடர்ந்தும் மோசமடைந்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்த சனத்தொகையிலும் வெறும் ஒருவீதமானவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நாட்டில் தொற்று அச்சுறுத்தல் இல்லை என்பதை அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள சிறிகொத்தவில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் கல்வியமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம், பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியே பலமடையும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

நாட்டில் இன்று கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையானது மிகவும் அபாய நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பரிசோதனை செயற்பாடுகள் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளன. நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் இதுவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. 

ஒட்டுமொத்த சனத்தொகையிலும் வெறும் ஒரு சதவீதமானவர்களே இதுவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் எவ்வாறு பொதுமக்களிடையே இந்த வைரஸ் பரவவில்லை என்று உறுதியாக தெரிவிக்க முடியும்? அதற்கு என்ன நிர்ணயம் இருக்கின்றது? குறைந்தபட்சம் நூற்றுக்கு ஐந்து வீதமாவது பரிசோதனை செய்து அறிவிக்கப்பட வேண்டும். 

அதேபோல கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலத்தில் ஸ்ரீலங்காவில் பலருக்கும் தொழில்வாய்ப்பு இழக்கப்பட்டது. வருமானத்தை பலரும் இழந்தார்கள். இந்நிலையில் நாட்டு மக்களின் பொருளாதார நிலைமையும் மோசமடைந்திருப்பதாக யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வீழ்ந்துகிடக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே உள்ளது. இன்று நாட்டை சரியான வழியில் நடத்திச்செல்வதற்கான தகுதி ஐக்கிய தேசியக் கட்சிக்கே இருப்பதால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே பலமடையும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்” என்றார்.

 

Advertiesment