இலங்கையில் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாகப் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கையின் முன்னணி மருத்துவ தொழிற்சங்கமான இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவருமான சமன் ரத்னப்பிரிய கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக பொதுசுகாதார பரிசோதகர்கள், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளிலிருந்து விலகி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
'பொது சுகாதார பரிசோதகர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இலங்கை தாதியர் சங்கத்தின் முழுமையான ஆதரவினை அளிக்கின்றோம். உண்மையிலேயே சுகாதார அமைச்சு பலவீனமடைந்து வருகின்றது. இதனை சரிப்படுத்தாவிட்டால் பொதுமக்களே பாதிக்கப்படுவார்கள். பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட வேண்டும். விசேடமாக கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பற்றி கூறப்படுகின்றது.
இந்த தொற்றை முழுமையாக ஒழித்துவிட்டோம் எனக்கூறிய நாடுகளில் இன்று மீண்டும் தொற்று தலைதூக்கியுள்ளது. இலங்கையிலும் தொற்றின் இரண்டாம் தாக்கம் குறித்தும் பேசப்படுகிறது. இரண்டாம் அலைக்குத் தயாராகுங்கள் என்பதையே உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்து வருகிறது. கொரோனா தொற்றை முழுமையாக எந்த நாடுகளும் வெற்றிகொள்ளவில்லை. அவுஸ்திரேலியா தொற்றை அழித்துவிட்டதாகக் கூறியிருந்தாலும் தற்போது அந்த நாட்டில் மீண்டும் தொற்று பரவத் தொடங்கியதால் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் நோயாளர்களின் எண்ணிக்கை இலட்சங்களைக் கடந்து செல்கிறது. சிங்கப்பூரிலும் நோயாளர்களின் தொகை அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறையுடன் மோதி மக்களை பாதிக்கப்பட செய்ய வேண்டாம் என்பதை அரசாங்கத்திற்குத் தெரிவிக்கின்றோம். இலங்கையில் இதுவரை 11 பேர் கோவிட்-19 வைரஸினால் உயிரிழந்ததோடு 2700க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றைக் கட்டுப்படுத்திவிட்டதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும் இன்று பல பகுதிகளில் தொற்று பரவியுள்ளது. சாதாரணமாக உகண்டா, நேபாளம், சோமாலியா போன்ற நாடுகளில் தொற்று பரிசோதனை அதிகமாக செய்யப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டில் மட்டும் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் பேருக்கே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வாறு தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்க முடியும்? என்றார்.
Lanka Newsweek © 2021