கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோரால் அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட விதம் என்பன குறித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கை என்பவற்றை ஆராய்ந்து பார்க்கையில், எனது அனுமாணத்திற்கு அமைவாக, கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எந்த உரிமையும் இல்லை.
அவருக்கு எதிராக காணப்படுகின்ற ஏனைய அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் இருக்க, தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற்றுக்கொண்ட விவகாரத்தை எடுத்துக்கொண்டால், அதிலுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானதாகும். அவர் பிரஜாவுரிமைச் சட்டம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டங்களை மீறியுள்ளார். போலியான ஆவணங்களை தயாரித்திருப்பது புலனாகின்றது.
கோட்டாபய ராஜபக்ச தமக்கான தேசிய அடையாள அட்டையை 1976ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதியே பெற்றுக்கொண்டிருந்தார். அதன் இலக்கம் 491724021V. அவரது வெளிநாட்டுக் கடவுச்சீட்டு இலக்கம் N 5384975. அவருக்கு அமெரிக்கக் குடியுரிமையானது கடந்த 2003ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி கிடைத்தது.
குடியுரிமைச் சட்டத்தின்படி ஒருநபர் வெளிநாட்டில் குடியுரிமை ஒன்றைப் பெற்றால் அவரது இலங்கைப் பிரஜாவுரிமை இயல்பாகவே இரத்தாகும்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் அமெரிக்கப் பிரஜையாகவும் தற்காலிக வீசா பெற்றுமே இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். மஹிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதியாகினார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதியே இரட்டைக்குடியுரிமை கிடைத்தது.
இந்த செயற்பாடானது மிகவும் துரிதகதியில் அதுவும் பொறுப்புகூறும் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவதற்கு முன்னரே இடம்பெற்றிருக்கின்றது.
இரட்டைக் குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பம் செய்த படிவத்தில் கோட்டாபய ராஜபக்ச, தன்னை ஒரு கணினி மென் பொறியியலாளர் என்று அடையாளப்படுத்தியிருக்கின்றார். அதன் காரணமாக அந்த விண்ணப்பத்தை ஒரு போலி ஆவணம் என்றே கணக்கிடப்பட வேண்டும்.
அதேபோன்று அவர் தனது புதிய தேசிய அடையாள அட்டையை (194917210010) 2016ஆம் ஆண்டிலேயே அதுவும் அமெரிக்கக் குடியுரிமையை வைத்திருந்த சந்தர்ப்பத்திலேயே பெற்றுள்ளார்.
சட்டவிரோதமான புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றிருந்தபோது, 2017,2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் வாக்களால் இடாப்பில் அவர் தனது பெயரை பதிவுசெய்வதற்காக இரத்து செய்யப்பட்ட செல்லுபடியாகாத பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தியிருக்கின்றார். இந்த செயற்பாடானது மிகவும் பாரதூரமான குற்றமாக கருதப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச தனது இலங்கை கடவுச்சீட்டினை (N192600594) அமெரிக்கக் குடியுரிமை வைத்திருந்த சந்தர்ப்பத்திலேயே பெற்றிருக்கின்றார். இவை அனைத்துமே பாரதூரமான குற்றங்கள் என்பதோடு வேண்டுமென்றே அல்லது தெரிந்துகொண்டே செய்த குற்றங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
சட்டவிசாரணைகளில் கோட்டாபயவுக்கு எதிராக எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிகிறதில்லை. சட்டரீதியாக பார்த்தால் அவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. குற்றங்களின் அடிப்படையில் அவருக்கு சிறைதண்டனை விதிக்கப்படுவதை தடுக்கவும் முடியாது.
Lanka Newsweek © 2021